காரைக்கால் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை
புதுச்சேரி: காரைக்கால் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி செய்திக்குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு வங்க கடலில் நாளை 13ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளை மறுநாள் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வரும் 14ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் படகுகள் நாளை மாலைக்குள் திரும்ப வேண்டும். படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.