மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு: இலவச அரிசி திட்ட விதிமுறையில் திருத்தம்
புதுச்சேரி: புதுச்சேரி ரேஷன் கடைகளில் நாளை 10ம் தேதி முதல் மீண்டும் இலவச அரிசி வழங்க அரசு முடிவு செய்து, பணிகளை வேகப்படுத்தியுள்ளது. மேலும், மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த காங்., ஆட்சியில் தரமற்ற அரிசி வழங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து, அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய தடை விதித்ததால், ரேஷன் கடைகள் மூடப்பட்டன.மத்திய அரசின் உத்தரவின்படி, நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கியில் செலுத்தும் நடைமுறையை கொண்டு வந்தார். இதனால், கடந்த 2019ல் ரேஷன் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இதன்படி ஒரு கிலோ அரிசி ரூ. 30 என, மஞ்சள் கார்டுக்கு 10 கிலோவுக்கு ரூ.300, சிகப்பு கார்டுக்கு 20 கிலோவுக்கு ரூ.600 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.மார்க்கெட்டில் அரிசி விலை உயர்வு உட்பட பல காரணங்களால் மீண்டும் ரேஷனில் அரிசி வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர். கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால், விரைவில் ரேஷன்கடைகளில் அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.அதன்படி தீபாவளிக்கான இலவச 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. விடுப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இருப்பினும், ரேஷன் கடைகளை முழுமையாக திறந்து மாதந்தோறும் இலவச அரிசி வழங்கும் பணி துவங்கப்படவில்லை. இதற்கிடையில் பொங்கலையொட்டி நாளை 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல்வரும் ஒப்புதல் வழங்கிய நிலையில், இதற்கான பணிகள், குடிமை பொருள் வழங்கல் துறை, கான்பெட் மூலமாக வேகமாக நடந்து வருகிறது. இலவச அரிசி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதுச்சேரி இலவச அரிசி விநியோக விதிகளிலும் குடிமை பொருள் வழங்கல் துறை திருத்தம் கொண்டு வந்துள்ளது. 10 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை என்று இருந்ததை மாற்றி அமைத்து, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்ப ரேஷன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசி, வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும் என மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் கார்டுகளுக்கு இல்லை என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.எதிர்காலத்தில், தமிழகத்தினை போன்று சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகள் வழியாக மானிய விலையில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப இலவச அரிசி திட்ட விதிகளில் சமையல் எண்ணை, இதர உணவு அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும், இதன் ஒருங்கிணைப்பு நிறுவனமாக கான்பெட் நிறுவனம் செயல்படும் என, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இலவச அரிசி திட்டம் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் செயல்படுத்திட பணிகளை வேகப்படுத்தப்பட்டு வருகிறது.