அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபம் இடிப்பு
புதுச்சேரி : இ.சி.ஆரில், அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தை இடிக்கும் பணியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.இ.சி.ஆரில் கருவடிக்குப்பம் அருகில், தனியார் திருமண மண்டம் உள்ளது. புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தில் அனுமதி பெறாமல், 4 அடுக்கில், மண்டபம் கட்டப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது. மேலும், அப்பகுதியில், பொதுப்பணித்துறையினர் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மண்டபத்தின் சில பகுதி சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளதாகவும், மண்டபம் முழுதும் பி.பி.ஏ., அப்ரூவல் வீதிமிறல்களுடன் கட்டப்பட்டுள்ளதாக, நகர அமைப்பு குழுமத்தின் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்துள்ள ஆய்வில் தெரியவந்தது.கோர்ட் உத்தரவை அடுத்து, மண்டபத்தை இடிப்பற்கு, தாசில்தார் செந்தில்குமார், எஸ்.பி., வீரபல்லவன், இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் நேற்று சென்றனர். அதனை தொடர்ந்து மண்டபத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.