பாழாகும் மருத்துவர் குடியிருப்பு : சீரமைக்க அரசு முன்வருமா?
புதுச்சேரி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் குடியிருப்பு கட்டடம் பாழடைந்துள்ளதால், சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெட்டியார்பாளையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த வளாக பகுதியில்,மருத்துவர்கள் குடியிருப்பு கட்டடம் உள்ளது.ஏற்கனவே அந்த கட்டடத்தில் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கட்டடம் சரியாக பராமரிக்கப்படாமல்,பாழடைந்துள்ளது. கட்டடத்தின் வெளிப்புறத்தில், செடி, கொடிகள் முளைத்துள்ளதால்,விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கட்டடம் பாழடைந்து கிடப்பதால், மருத்துவமனையில் பணி செய்யும், ஊழியர்களும், அங்கு வரும் நோயாளிகள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.அரசு உடனடியாக, நடவடிக்கை எடுத்து, கட்டடத்தை மறு சீரமைப்பு செய்து, மருத்துவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். அனுமதி கிடைக்குமா? ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாழடைந்துள்ள மருத்துவர்கள் குடியிருப்பு கட்டடத்தை சீரமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன், அதற்கான பணி துவங்கப்படும் என, சிவசங்கர் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.