உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோவில்லின் செயல் திட்டங்கள் குறித்து குஜராத் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

ஆரோவில்லின் செயல் திட்டங்கள் குறித்து குஜராத் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

வானுார்: ஆரோவில் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து குஜராத் மாநில அதிகாரிகளுடன் ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி ரவி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.சர்வதேச நகரமான ஆரோவில் அறக்கட்டளை செயலராக உள்ள ஜெயந்தி ரவி, குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.ஆரோவிலில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கல்வி, தொழில்நுட்பம், புதுமையான அணுகுமுறைகளை பகிரும் முயற்சியாக, குஜராத் அரசின் முக்கிய அதிகாரிகள், ஆட்சியர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலியில் அவர் கலந்துரையாடினார்.அப்போது, ஆரோவிலின் புதுமையான மற்றும் தன்னிறைவான திட்டங்கள், பயோ-மெட்ரிக், பசுமையான கட்டுமான முறைகள், ரசாயனமில்லாத இயற்கை தயாரிப்புகள், இசைக்கருவிகள் தயாரித்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஜெயந்தி ரவி எடுத்துரைத்தார்.இதில் ஈர்க்கப்பட்ட குஜராத் அதிகாரிகள், ஆரோவில் செயல்திட்டங்களை தங்களது பகுதிகளில் செயல்படுத்த ஆர்வம் தெரிவித்தனர். இந்த செயல்திட்டங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக, ஜனவரி முதல் வாரத்தில் ஆரோவிலின் முக்கிய உறுப்பினர்கள் குஜராத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆரோவில் அறக்கட்டளையின் முதன்மை அதிகாரிகள் சீதாராமன், தனலட்சுமி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் மல்லிகா கங்குலி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ