தீபாவளி சிறப்பு அங்காடி: முதல்வர் திறந்து வைப்பு
புதுச்சேரி; புதுச்சேரி கான்பெட் சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, கூட்டுறவு செயலர் யஷ்வந்தையா தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி தீபாவளி அங்காடியை திறந்து வைத்தார். விழாவில் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் ரங்காசமி பேசுகையில், புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த மாதம் அரிசி ஆலையையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடி மூலம் நடத்தப்படும் பெட்ரோல் பங்கின் மூலம் அரசுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. கடந்த ஆட்சியில் நலிவடைந்த கூட்டுறவு சங்களை மீட்டெடுக்க ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாண்லே நிறுவனத்திற்கு 2024---25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும் என்றார்.