ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசு: வி.எச்.பி.,
புதுச்சேரி : விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், புதுச்சேரியில் நடந்தது. இதையடுத்து, அமைப்பின் வட தமிழக மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், செயலர் பாலமணிமாறன் கூறியதாவது: விஸ்வ ஹிந்து பரிஷத்தின், 60ம் ஆண்டு நிறைவையொட்டி, ஆக., 16ல் கிருஷ்ண ஜெயந்தியை, தமிழக கிராமங்களில் கொண்டாட உள்ளோம். தீபாவளி பண்டிகையின் நான்காவது நாளில் வேல் பூஜை, விளக்கு பூஜை, கந்த சஷ்டி பாராயணம் நடைபெறும்; இதை ஆண்டுதோறும் நடத்துவோம். தமிழகத்தில், போலீசார் அனுமதி தர மறுத்ததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். தி.மு.க., அரசு ஹிந்து மதத்திற்கு எதிராகவே ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறது. வரும் செப்., 7 முதல் 21 வரை, நாடு முழுதும் கலெக்டர்களை சந்தித்து, ஹிந்து கோவில் சொத்துக்களை அபகரிக்கக் கூடாது; என, மனு அளிக்க உள்ளோம். இதை, நாடு தழுவிய மக்கள் இயக்கமாக நடத்த இருக்கிறோம். இவ்வாறு கூறினர்.