உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் தலைமை செயலருடன் சந்திப்பு

தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் தலைமை செயலருடன் சந்திப்பு

புதுச்சேரி : இலவச அரிசி இன்னும் 15 நாட்களில் வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவரிடம் தலைமை செயலர் உறுதி அளித்தார். எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் பாகூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நேற்று மாலை, தலைமை செயலகத்தில், தலைமை செயலர் சரத் சவுகானை சந்தித்து பேசினர். அப்போது, புதுச்சேரியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து 7 பேர் இறந்துள்ளனர். 50 பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், இப்பிரச்னைக்கான மூல காரணத்தை பொதுப்பணித் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. குப்பை அகற்றுவதில் தொடர் குழப்பம் நிலவி வருகிறது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் மாநில அரசு பங்களிப்பு நிதி விடுவிக்காதது, இலவச அரிசி வழங்காதது குறித்த பிரச்னைகளை தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த தலைமை செயலர், நெல்லித்தோப்பு சக்தி நகரில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை கண்டுபிடித்து சரி செய்யப்பட்டு விட்டது. இனி இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், நிரந்தர தீர்வு காண அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. குப்பை அகற்றும் பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் விரைவில் தீர்வு காணப்படும். பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் புதுச்சேரி அரசின் பங்களிப்பு விடுவிக்கப்பட்டு, ஒரு வாரத்திற்குள் விடுபட்ட கிராம சாலை பணிகள் துவங்கப்படும். இலவச அரிசிக்கு டெண்டர் விடப்பட்டுவிட்டது. இன்னும் 15 நாளில் அரிசி வழங்கப்படும் என, உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை