உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்: அரசுக்கு தி.மு.க., சிவா கண்டனம்

அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்: அரசுக்கு தி.மு.க., சிவா கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை சம்பவங்களை அதிகரித்து வருவதால், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசுக்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில அமைப்பாளர் சிவா விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாகி தொடர் கொலைகளால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதே பல கொலை மற்றும் சமூக விரோதச் செயலுக்கு காரணமாக அமைகிறது. என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்த 5 மாதங்களில் 24 கொலைகள், 12 கொலை முயற்சியும் அரங்கேறி உள்ளன. இந்த தொடர் கொலை சம்பவங்களால் புதுச்சேரி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. உளவுத்துறையின் தோல்வியும், போலீசாரின் செயல்பாடற்ற தன்மையுமே குற்றவாளிகள் துணிச்சலுடன் வலம் வரக் காரணமாக அமைந்துள்ளது. மக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய இந்த அரசு உடனடியாக விழித்தெழ வேண்டும். குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்கவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் முற்பட வேண்டும். இனியும் மக்களின் பாதுகாப்பில் அரசு மெத்தனப் போக்கைக் கடைபிடித்தால், தி.மு.க., மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ