உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை சாலையின் கட்டை சுவரின் குட்டி வரலாறு தெரியுமா?

கடற்கரை சாலையின் கட்டை சுவரின் குட்டி வரலாறு தெரியுமா?

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணவே கூடாத இடம் ஒன்று உண்டென்றால், அது நீண்ட அழகிய கடற்கரை சாலை தான். பரந்து விரிந்த வெண் மணல் இல்லாவிட்டாலும், பழைய சாராய ஆலையில் இருந்து டூப்ளே சிலை வரையில், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு வங்க கடலை உரசியப்படியே நீண்டு இருக்கும் கடற்கரை சாலையின் புரோமோனேடு பீச்சும் கொள்ளை அழகு தான்.விடியற்காலையில் கதிரவன் பூமி பந்தின் மீது ஒளியை படரவிட்டு சுறுசுறுப்பாக எழுவதும், மாலையில் களைப்பாய் விழுந்து மறைவதும், இடை இடையில் கடல் காற்று நம்மை வருடிவிட்டு செல்வதும், கருங்கற்களில் ஆக்ரோஷமாக தொட்டுவிட்டு கலைந்து ஓடி விளையாடும் கடல் அலைகளின் காட்சிகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும், இந்த இயற்கை காட்சிகளை கடற்கரை சாலையின் சுவர் கட்டையில் அமர்ந்தபடி ரசிப்பது அழகிய சொர்க்கம்.இந்த கடற்கரை சாலையின் நீண்ட கட்டை சுவருக்கு 'குட்டி' வரலாறு உண்டு. புதுச்சேரி ஆளுநர் லெனுவார் காலத்தில் புதுச்சேரி நகரை சுற்றி, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதியில் மதில் சுவர் எழுப்பப்பட்டது. அதன் பிறகு 1747ல் துாய்ப்ளே காலத்தில் கிழக்கிலும் மதில் சுவர் எழுப்பி, கடற்கரை வாயிலும் அமைக்கப்பட்டது. ஆனால் 1761ல் ஆங்கிலேயேர்கள் புதுச்சேரி நகரை தரைமட்டமாக்கினர். அதையடுத்து மீண்டும் புதுச்சேரி பிரெஞ்சியர் கைக்கு கிடைத்ததும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதியில் இருந்த மதில் சுவர்கள் இருந்த இடங்கள் அனைத்தும் நான்கு சுற்றுச்சாலைகளாக மாற்றப்பட்டன.அதன்படி, 1827 ஜூலை 6ம் தேதி கிழக்கு மதில் சுவர் இருந்த இடம் புரோமோனேடு பீச் அதாவது உலாவு சாலையாக அறிவிக்கப்பட்டது. அப்போது பிரெஞ்சு கோலோனிய அமைச்சரை கவுரவிக்கும் வகையில் கூர் ஷப்ரோல் என்றும் பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து 1853ல் துறைமுகத்தையும், கடற்கரை சாலையையும் கடல் அரிப்பில் இருந்தும், இயற்கை சீற்றத்தில் இருந்தும் பாதுகாக்க கடற்கரையோரம் செங்கல்லான ஒரு மதில் சுவரை பிரமாண்டமாக கட்டி எழுப்பினர். அந்த மதில் சுவரையொட்டி நீண்ட மணல்பரப்பும், கடற்கரைக்கு செல்ல கீழ் படிக்கட்டுகளும் இருந்தன.ஆனால், காலபோக்கில் கடல் அரிப்பினால் மணல் பகுதிகளும், அந்தபடிக்கட்டுகளும் சிதைந்து காணாமல் போய்விட்டது. அத்துடன், மதில் சுவரும் உயரம் குறைந்து 175 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை தன்னகத்தே கொண்டு கட்டை சுவராகி, இப்போது பொதுமக்கள் இளைப்பாறும் அமர்வு இடமாக மாறிவிட்டது. அதற்கு சான்றாக இன்றைக்கும் லே கபே ஓட்டல் அருகே மதில் சுவர் எழுப்பப்பட்ட 1853 ம் ஆண்டை குறிக்கும் கல்வெட்டும் ஒன்றும் இடம் பெற்று, காவியமாக நிற்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ