மின் விபத்துக்களை தடுக்க ஈ.எல்.சி.பி., பொருத்த வேண்டும்
புதுச்சேரி : இடி, மின்னல் இருக்கும் போது, டி.வி., கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என மின்துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழைக்காலங்களில் மின்தடை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு அவசர கால கட்டுப்பாட்டு அறையை 0413-2339532, 1800-425-1912 அல்லது 1912 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி, கயிறு, ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. இடி, மின்னல் விழும் போது தண்ணீர் தேங்கிய பகுதியில் நிற்கக்கூடாது.மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட வேண்டாம். உடனே அருகில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இடி, மின்னல் இருக்கும் போது, டி.வி., கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும். மழைக்காலங்களில் மின் விபத்துகளை தடுக்க, ஈ.எல்.சி.பி., எனப்படும், மின் கசிவு தடுப்பான்களை, வீடுகளில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த வேண்டும். ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை வெறும் கைகளால் போட வேண்டாம். எலி, காட்டு பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களை சுற்றி மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். மின்வேலி அமைப்பது கண்டறியப்பட்டால், மின் நுகர்வோரின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.