உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ட்ரோன் மூலம் அவசர மருந்துகள்: ஜிப்மரில் சோதனை ஓட்டம்

ட்ரோன் மூலம் அவசர மருந்துகள்: ஜிப்மரில் சோதனை ஓட்டம்

திருக்கனுார் : ஜிப்மரில் இருந்து மருத்துவ வசதி இல்லாத தொலைதுார பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் அவசர மருந்துகள் அனுப்புவது தொடர்பாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.சரியான போக்குவரத்து வசதி இல்லாத தொலைதுார பகுதிகளுக்கு விரைவான மருத்துவ சேவை வழங்குவது சவாலான விஷயமாக உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, இது அனைத்து பகுதிகளிலும் கண்கூடாக தெரிந்தது. சாலை மார்க்கமாக அவசர மருந்துகளை கொண்டு சென்றது சிக்கலாக இருந்தது.இதனையடுத்து, மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய சுகாதார வள மையத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் இருந்து ட்ரோன் மூலம் சரியான போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு அவசர மருந்துகளை அனுப்பும் திட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு ஜிப்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ட்ரோன்கள் இயக்குவது தொடர்பாக ஜிப்மர் பெண் ஊழியர்கள் பத்து நாட்களுக்கு தொலைநிலை விமானி பயிற்சி வகுப்பை ட்ரோன் டெஸ்டினேஷன் குருகிராம் தளத்தில் முடித்தனர்.தொடர்ந்து அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து ட்ரோனை இயக்கி கிராமப்புற மருத்துவமனைக்கு, அவசரக்கால சிகிச்சை மருந்துகள் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தினை நடத்தினர். அடுத்த கட்டமாக ஜிப்மர் நிர்வாகம் மூலம் மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலவழி மையத்திற்கு அவசரக்கால சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.மண்ணாடிப்பட்டு எல்லைக் காளியம்மன் கோவில் வளாகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஜிப்மர் தகவல் தொழில்நுட்ப குழுவினர் சிறிய ரக ட்ரோன் விமானத்தில் அவசரகால சிகிச்சைக்கான 5 கிலோ மருந்துகளை வைத்து 30 நிமிடம் வானில் பறக்க வைத்து சோதனை செய்தனர்.ஜிப்மர் தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜ்குமார் சித்தரியா, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி மணிமொழி உள்ளிட்டோர் சோதனையை பார்வையிட்டனர். கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் இந்த ட்ரோன் சேவை மருத்துவ உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.உயிர் காக்கும் சேவையில் இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் ஜிப்மர் மற்ற மருத்துவமனைக்கு முன்னோடியாக திகழ உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ