உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்கவுன்டர் சுலபமல்ல அமைச்சர் நமச்சிவாயம் பளீச்

என்கவுன்டர் சுலபமல்ல அமைச்சர் நமச்சிவாயம் பளீச்

புதுச்சேரி,; கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரைவில் இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். பா.ஜ., எம்.எல்.ஏ., சாய்சரவணன்குமார் நேற்று சட்டசபை வளாகத்தில் பேட்டியளித்தபோது, கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கரசூர் தொழிற்பேட்டையில், தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்க தற்போது எந்த குழுவும் அமைக்கவில்லை. தொழில்துறை செயலர் தலைமையிலான குழு மட்டுமே உள்ளது. அதில், அதிகாரிகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். முதல்வர், நான் உட்பட அதிகாரிகள் அல்லாத எவரும் அந்த குழுவில் இடம் பெறவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. அவ்வப்போது சில சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் 'என்கவுன்டர்' செய்வது சுலபமல்ல. அதில், நடைமுறை சிக்கல் உள்ளது. சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்தும், இனி வரும் காலங்களில் கொலை யை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நாளை (இன்று) டி.ஜி.பி., தலைமையில் நடக்கிறது. அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது. பதவியில் இருந்தவர் ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பெண் எம்.எல்.ஏ., யாரிடமும், எந்த புகாரும் அளிக்காத நிலையில் எப்படி நடவடிக்கை எடுப்பது. பி.சி.எஸ்., அதிகாரிகள் பலர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டனர். தற்போது, அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்கள் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படும். அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது எதுவும் கூறாதவர், தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதற்காக கூறுகிறார் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ