காலாவதி மதுபானங்களை அழிக்க கலால் துறை உத்தரவு
புதுச்சேரி : புதுச்சேரி மதுபான கடைகளில் காலாவதியான மதுபானங்களை அழிக்க வேண்டும் என, கலால்துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் மொத்தம், சில்லரை என, 534 மதுபான கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இந்த மதுபான கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலால் துறைக்கு தொடர்ந்து புகார் வந்தன. குறிப்பாக, பீர் வகைகள் காலாவதியான பிறகு விற்கபடுவதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உரிமம் பெற்ற வளாகத்திற்குள் காலாவதியான மதுபானங்கள் சேமிக்கப்பட கூடாது. காலாவதியான மதுபானங்களை உரிமையாளர்கள் கண்டறிந்து பிரித்து கலால்துறை சட்டபடி அழிக்க வேண்டும். மீறினால் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.