உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

பாகூர் : சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாகூர் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களுக்கு வருவாய் துறை ஊழியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, சாத்தனுார் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வினாடிக்கு, 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்வை பொருத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்திருந்தனர். தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர், சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு, மணமேடு உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அதில், சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீ ர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என, எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை