பறக்கும் இலவம் பஞ்சு: பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
புதுச்சேரி: அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் முற்றிய நிலையில் உள்ள இலவம் பஞ்சு காய்களை ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் இலவம் மரங்கள் உள்ளன. இம் மரத்தில் உள்ள காய்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் முற்றி விடுகின்றன. அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள இலவம் மரங்களில் முற்றிய காய்களை பறிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை என, பல இடங்களில் வளர்ந்துள்ள இலவம் மரங்களில் காய்த்துள்ள இலவம் காய்களை பறிக்காததால், அவை, காய்ந்து வெடித்து பஞ்சுகள் காற்றில் பறப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.ஆண்டுதோறும் கோடை காலத்தில் இந்த நிலை நீடித்து வருகிறது. சாலையோர இலவம் மரங்களில் காய்க்கும் காய்களை உரிய நேரத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த முறையில் ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.