உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்னைக்கு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்.ஆர்.காங்., வெற்றி

சென்னைக்கு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்.ஆர்.காங்., வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த், 8,482 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்ற அவர், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. என்.ஆர்.காங்., சார்பில், அசோக் ஆனந்த், தி.மு.க., சேதுசெல்வம், காங்., விநாயகம், இ.கம்யூ., சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 80.81 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதில், 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம் 21,756 பேர் ஓட்டளித்தனர். லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பதிவான 112 தபால் ஓட்டுகளில் 65 ஓட்டுகளை பெற்று என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார். தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. 31 ஒட்டுச் சாவடிகளில் பதிவான ஓட்டுகள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே ஆதிக்கம் செலுத்திய என்.ஆர்.காங்.,வேட்பாளர் அசோக் ஆனந்த் இறுதியாக 13,358 ஓட்டுகளுடன் அமோக வெற்றி பெற்றார். தனக்கு அடுத்து வந்த காங்., வேட்பாளர் விநாயகத்தை விட 8,482 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். த.வெ.க.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் விநாயகம் 4,876 ஓட்டுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தி. மு.க., வேட்பாளர் சேதுசெல்வம் 2,664 ஓட்டுகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார். இ.கம்யூ., கட்சி., வேட்பாளர் சலீம் 310, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகுமாரி 172 ஓட்டு பெற்றார். குடியரசு கட்சி கலைவாணன், 54; சுயேச்சை வேட்பாளர்களான ரகு, 70; வாசந்தி, 57; ஜெயபாலன், 35; நித்யா, 28; சாமிநாதன், 8, ஓட்டுகளை பெற்றனர். நோட்டாவுக்கு 225 ஓட்டுகள் கிடைத்தன. நாம் தமிழர், சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி நோட்டா ஐந்தாவது இடத்தை பிடித்தது. தி.மு.க., இ.கம்யூ., நாம் தமிழர், சுயேச்சைகள் என 9 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை