மின்துறை அதானியிடம் விற்கப்பட்டது முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
அரியாங்குப்பம்: 'மின்துறை அதானியிடம் விற்கப்பட்டுள்ளது' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார். ஓட்டுச்சீட்டு திருட்டை கண்டித்து, காங்., சார்பில், புதுச்சேரியில் நடந்த ஊர்வலத்தில், பங்கேற்ற, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, 4 ஆண்டுகளாக ஊழலை தவிர வேறு ஒன்றும் இல்லை. மாநில அந்தஸ்து, சிறப்பு நிதி, புதுச்சேரிக்கு தனி கணக்கு, நிதி கமிஷனில் சேர்ப்பேன் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து பிரதமரிடம் வலியுறுத்தவில்லை. இலவச பஸ் விடுவது, பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வங்கி கணக்கில் டிபாசிட் செய்வது, மகளிர் உரிமைத் தொகை ஆயிரம், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரத்து 500 என்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரெஸ்டோபார் என்ற போர்வையில் குடித்துவிட்டு ஆடுவதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. மின் துறையை, முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும், அதானிக்கு விற்று விட்டு வெளியே சொல்லாமல் மறைத்துள்ளனர். நமச்சிவாயம் ரூ.380 கோடிக்கு பிரீபெய்டு மீட்டர் வாங்கியிருக்கிறார். காரைக்கால் துறைமுகம் அதானியிடம் கொடுக்கப்பட்டு விட்டது. இப்படி போனால், புதுச்சேரி முழுதும் அதானியின் கையில் போய்விடும். இவ்வாறு அவர் பேசினார்.