ஜனாதிபதியிடம் இன்று ஊழல் பட்டியல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சரவையில் நடக்கும் ஊழல் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி ஜனாதிபதியிடம் இன்று மனு அளிக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அவர், நேற்று டில்லியில் கூறியதாவது: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து வருகிறது. இதனை காங்., போராட்டம் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம். போலி பத்திரம் மூலம் கோவில் நிலத்தை அபகரித்தவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஒருவர் பினாமி பெயரில் சொத்து வாங்கியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. 6 மதுபான ஆலைகளுக்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ., எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டுமென கவர்னரிடம் காங்., கோரிக்கை வைத்தது. இதுவரை பதில் இல்லை. புதிதாக 750 பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உரிமத்திற்கும் ரூ.40 லட்சம் கைமாறியுள்ளது. பொதுப்பணித்துறையில் ஒவ்வொரு டெண்டரிலும் 30 சதவீதம் ஊழல் நடந்து வருகிறது. ஊழல் செய்பவர்களை விடமாட்டேன் எனக்கூறும் பிரதமர் மோடி, புதுச்சேரியில் நடக்கும் ஊழலை கண்டு கொள்வதில்லை. அதனால் தான் காங்., சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் குழுவை அமைத்து, ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, ஜனாதிபதியை சந்தித்து நீதி விசாரணை கேட்பதற்காக, நேரம் ஒதுக்கி தர கேட்டுள்ளோம். இன்னும் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நேரம் கிடைக்கவில்லை எனில், இன்று ஊழல் பட்டியலை ஜனாதிபதி அலுவலகத்தில் கொடுக்க உள்ளோம்' என்றார்.