போலீசாருக்கு ஊக்கப் பரிசு மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி: புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட போலீசாருக்கு ஊக்கப் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை: புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுச்சேரி காவல்துறை மிகவும் சிறப்பாக செய்து, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்தது. இந்தாண்டு வாகன போக்குவரத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது.வாகன நிறுத்தத்திற்கும் பல புதிய யுக்திகளை கையாண்டது. சிறப்பு பஸ்களை இயக்கி பயணிகளுக்கு தகுந்த வசதிகளையும் செய்து கொடுத்தது, மாநிலம் முழுதும் அதிகப்படியான காவலர்களை பணியமர்த்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது பாராட்டக்கூடியது.முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர், காவல்துறையின் உயர் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் மற்ற அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர்.புத்தாண்டு தினத்தில் தனது குடும்பங்களை விட்டு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அரசு ஊக்கப்பரிசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.