பைபாசில் அதிவேகமாக வந்த கார் வீட்டின் மீது மோதி கவிழ்ந்து விபத்து
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் பைபாசில் அதிவேகமாக வந்த கார் வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில், 4 பேர் காயமடைந்தனர்.கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரசாத், 30; அரவிந்தர் வீதியைச் சேர்ந்த யோகேஷ்வரன், 21; பிருந்தாவனம் சிவகிேஷார், 23; கிருமாம்பாக்கம் மணிகண்டபிரபு, 23; ஆகியோர் வில்லியனுார் அருகில் நடந்த கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பினர்.பி.ஒய்.01.பியூ.6996 எண்ணுடைய, 'போர்ட் கிளாசிக்' காரில் அரும்பார்த்தபுரம் பைபாசில் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.காலை 10:30 மணிக்கு, பைபாசில் அதிவேகமாக வந்த கார் உழந்தை ஏரி அருகில் உள்ள வளைவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தது. கார் சாலையோரம் இடது பக்கம் உள்ள வீட்டின் கிரீல் கேட்டை உடைத்து கொண்டு, காலி மனையில் தலை குப்புற கவிழ்ந்தது.காரில் இருந்த ஏர் பேக்குகள் ஒப்பன் ஆகவில்லை. தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த காரில் சிக்கி இருந்த ராம்பிரசாத், யோகேஷ்வரன், சிவகி ேஷார், மணிகண்டபிரபு ஆகியோரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போக்குவரத்து போலீசார், ரெக்கவரி வேன் மூலம் காரை மீட்டனர். காயமடைந்த நால்வரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். முதல் உதவி சிகிச்சை பெற்று நால்வரும் வீடு திரும்பினர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை விளக்கு தேவை
அரும்பார்த்தபுரம் பைபாஸ் பணி இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக வாகனங்கள் பயணிக்க துவங்கி விட்டது. விசாலமான சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இச்சாலையில வளைவு பகுதியில் எச்சரிக்கை விளக்குகள், ரிப்லெக்டர்கள், சாலை முழுதும் மின் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் விரைவாக அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.