உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியீடு ...: அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியீடு ...: அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' அல்லாத படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடுவழங்குவதற்கான அரசாணை நேற்று வெளியானது. புதுச்சேரியில், அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு எழுதினர். தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் அதிக அளவில் இல்லாததால், உயர் கல்வி சேர்க்கையில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அனைத்து உயர்கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனையேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், 'நீட்' அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பம் பெற்று, தரவரிசை வெளியிட்ட நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிடாததால், கவுன்சிலிங் நடத்தப்படாமல் இருந்தது. ஒருவழியாக 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு தயார் செய்து, லண்டன் சென்றிருந்த கவர்னருக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. கோப்பை ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஒப்புதல் வழங்கி, கடந்த வாரம் தலைமை செயலருக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 'சீட் மேட்ரிக்ஸ்' மற்றும் திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டு, ஆட்சேபனை பெறப்படும். அதன்பிறகு இறுதி கட்ட பட்டியலுடன் முதல் சுற்று சீட் ஒதுக்கீடு வெளியிட்டு, சேர்க்கை நடத்திட, சென்டாக் நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை