மேலும் செய்திகள்
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
07-Jan-2025
வில்லியனுார்: மண்டலம், மாநிலம் மற்றும் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் முகமது தாஜூதீன், தனது அறிவியல் படைப்புக்கு, ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல அறிவியல் கண்காட்சியிலும், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் உயர்நிலைப் பள்ளி அளவிலும் மற்றும் தென்னிந்திய அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் புதுச்சேரியில் உள்ள பழைய துறைமுகத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவரின் படைப்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.சாதனை மாணவன் முகமது தாஜூதீனுக்கு பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் இறைவாசன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் ரவி தலைமை தாங்கி, பள்ளிமாணவன் முகமது தாஜூதீனின், அறிவியல் படைப்பு குறித்து விளக்கி பாராட்டினார்.மேலும் மாணவனுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியை வரலட்சுமியையும், கவுரவபடுத்தி பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர்.நிகழ்ச்சியினை விரிவுரையாளர் வேல்முருகன் தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
07-Jan-2025