உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு 

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு 

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரை கவர்னர், முதல்வர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் திருவிழா, கடந்த 6ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நேற்று காலை 8:00 மணிக்கு நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து, இருவரும் மூலவர் அம்மனை தரிசனம் செய்தனர். தேர் கோவிலை சுற்றி வந்த போது, முக்கிய இடங்களில் பூசணிக்காய், தேங்காய் உடைத்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ., பாஸ்கர், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் அய்யப்பன் உட்பட ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, வீராம்பட்டினம் மக்கள் பாதுகாப்பு குழுவினர், கோவில் திருப்பணிக்குழு மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோர் செய்திருந்தனர். இன்று இரவு 9:00 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில், தெப்ப உற்சவம் நடக்கிறது. வரும் 22ம் தேதி இரவு 9:00 மணிக்கு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தெற்கு எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடும், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பஸ்கள் இயக்கம் செங்கழுநீர் அம்மன் தேரோட்டத்தை காண, புதுச்சேரி மற்றும் கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்களுக்காக, புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வீராம்பட்டினம் வரை சிறப்பு பஸ்கள், டெம்போக்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அரியாங்குப்பம் ஆர்ச் முதல் வீராம்பட்டினம் கோவில் வரை, சாலையில் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !