விக்சித் பாரத் நடைபயணம் கவர்னர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ‘போதைப் பொருளற்ற இளைஞர்கள் - விக்சித் பாரத்’ நடைபயணத்தை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் கேந்திரா, தேசிய சேவைத் திட்டம் மற்றும் புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் இயக்ககம் ஆகியவை சார்பில், ‘போதைப் பொருளற்ற இளைஞர்கள் - விக்சித் பாரத்’ விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. கடற்கரைச் சாலை காந்தி சிலை எதிரே துவங்கிய நடைபயணத்தை, கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். விழிப்புணர்வு நடைபயணம் அண்ணா சாலை வழியாக கம்பன் கலையரங்கம் எதிரே உள்ள அண்ணா திடலில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், தேசிய சேவைத் திட்ட தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். முன்னதாக நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.