இந்தியாவின் மொழி வளம் தனித்துவமானது ; கவர்னர் கைலாஷ்நாதன் பெருமிதம்
புதுச்சேரி : இந்தியாவின் மொழி வளம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தனித்துவமானது என, கவர்னர் பெருமிதத்துடன் பேசினார்.'பாஷினி ஆப்' அறிமுகம் மற்றும் துவக்கி நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் இன்று நாம் மற்றொரு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறோம். இன்றைய நிகழ்ச்சி மத்திய அரசின் 'பாஷினி ஆப்'மொழிபெயர்ப்பு செயலி மற்றும் அரசு துறைகளின் புதிய இணைய தளங்கள் அறிமுகம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொலைநோக்குப் பார்வை கொண்ட நம்முடைய பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொழி வளம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தனித்துவமானது. அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி உட்பட 22 மொழிகள் உள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட பேச்சு மொழிகள் உள்ளன.அப்படி பல மொழிகள் பேசும் மக்களின் நாடாக இந்தியா இருக்கிறது. இது ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், தகவல் பரிமாற்றத்தில், இது ஒரு தடையாகவே உள்ளது என்ற நடைமுறை உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இதை போக்கும் முயற்சியாக, மத்திய அரசு பாஷினி மொழிபெயர்ப்பு ஆப்பை உருவாக்கி இருக்கிறது. மொழி அடிப்படையிலான இடைவெளியை இந்த ஆப் குறைக்கிறது. பொதுமக்கள் தங்களுடைய சொந்த மொழியில் அரசின் திட்டங்கள், சேவைகள் பற்றிய தகவல்களை பெற உதவுகிறது. இந்த ஆப் செயற்கை நுண்ணறிவு, தற்போதைய புதிய தொழில்நுட்ப அடிப்படையில் மல்டி லாங்வேஜ் ஆப் -ஆக உருவாக்கப்பட்டு இருக்கிறது.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என்று தமிழ், மலையாளம், தெலுங்கு பேசும் பகுதிகளில் இருக்கும் மக்கள் புதுச்சேரி அரசின் அறிவிப்புகளை, திட்டங்களை இனி அவரவர் மொழியிலேயே தெரிந்த கொள்ள முடியும் என்பது மகிழ்ச்சியான ஒன்று' என்றார்.