| ADDED : அக் 14, 2025 06:03 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் 2 மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என கவர்னர் கைலாஷ்நாதன் வலியுறுத்தினார். புதுச்சேரியில் நடந்த ரூ.436 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: இந்தியாவின் உட்கட்டமைப்பு, சாலை வளர்ச்சி உலக தரத்திற்கு உயர்ந்து இருக்கின்றது. கடந்த 2014ம் முதல் இந்தியாவில் 1.50 லட்சம் கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்ட இருக்கின்றது. நாட்டின் சாலை பரப்பு 55 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 75க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் பை-பாஸ் திட்டங்கள், எக்ஸ்பிரஸ்வேக்கள், ஆறு வழி சாலைகள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம், போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை, பாலம், துறைமுகம், ரயில், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள்தான் நரம்பு மண்டலமாக உள்ளது.போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம், சாலைகள் மேம்பாடு அவசியம். சரியாக திட்டமிடுதல், விரைவாக செயல்படுத்துதல், தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தாரக மந்திரம்.இதனால்தான் உலக நாடுகள் ஆச்சரியப்படும் வகையில் நம் நாடு முன்னேற்றமடைந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒருமணி நேரமாக பயண நேரம் குறையும். புதுச்சேரியில் கட்டப்படும் மேம்பாலத்தால் நகர போக்குவரத்து சீராகும். இந்திரகாந்தி சதுக்கம் நடேசன் நகர் முதல் முதல் மரப்பாலம் வரையும், அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரையும் பாலம் அமைக்கவும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.