மேலும் செய்திகள்
உள்ளம்கவர் உயிரோவிங்களின் கண்காட்சி
07-Dec-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் நம்முடைய நீண்ட நெடிய வரலாறு, கலாசார பயணம் மற்றும் அதன் மைல்கற்களை வெளிப்படுத்துவதாக கவர்னர் கைலாஷ் நாதன் தெரிவித்தார்.புதுச்சேரி, பாரதி பூங்காவில், காமராஜர் ஓவியக் கலைக்கூடம் சார்பில், சாலையோர ஓவியக் கண்காட்சி நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள், ஓவியக்கலைக்கூட நிறுவனர் திலக் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் கைலாஷ்நாதன் கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:கலைகள் எப்போதும் மனித வாழ்க்கையோடு நெருக்கமான தொடர்பு உடையவை. அதிலும் நுண்கலைகள் மனிதர்களின் எண்ணங்களை, உணர்ச்சிகளை, கற்பனைகளை வெளிப்படுத்தும் ஊடகம். அவை இந்த பிரபஞ்சத்தின் அழகை, மனித நாகரீகத்தின் வளர்ச்சியை, பண்பாட்டின் சிறப்புகளை வரலாறாக தனக்குள்ளே வைத்து நமக்கு தருகிறது. சிற்பம், ஓவியம், நடனம், கட்டடம் உள்ளிட்ட எந்த கலையாக இருந்தாலும், நம்முடைய பண்பாட்டு வளர்ச்சியை, வரலாறாக தனக்குள்ளே கொண்டு இருக்கிறது.இங்கே பார்க்கும் ஓவியங்கள் நம்முடைய நீண்ட நெடிய வரலாறு மற்றும் கலாசார பயணத்தை அதன் மைல்கற்களை வெளிப் படுத்துகின்றன. சமுதாயத்தின் அனுபவங்களையும் உணர்வுகளையும் கலைத்திறத்தோடு பிரதிபலிக்கின்றன.கலைஞர்கள் தங்களுடைய அனுபவங்களை ஓவியங்களாக படைப்புகளாக நமக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளனர். ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதையை சொல்கிறது. தங்களுடைய படைப்புகள் மூலமாக அழகு, காதல் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் கலை வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்தவர்களுக்கு காமராஜர் விருது மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை, கவர்னர் வழங்கினார்.
07-Dec-2024