உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர் தேனீர் விருந்து : எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

கவர்னர் தேனீர் விருந்து : எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

புதுச்சேரி: விடுதலை நாளை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்து நிகழ்ச்சியை தி.மு.க., காங்., கட்சிகள் புறக்கணித்தன. புதுச்சேரி விடுதலை நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாலையில் கவர்னர் மாளிகையில் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்ச தீவு, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா மற்றும் விடுதலை நாள் தேனீர் விருந்து நடந்தது. இதில் வரவேற்பு நடனம், குச்சிப்புடி நடனம், கேரள நாட்டியம், பறையாட்டம், மலர் கம்பம், கர்நாடக மாநிலத்தின் நாட்டுப்புற நடனம், பஞ்சாப்பில் நிகழ்த்தப்படும் பங்கரா நடனம், அந்தமான் நிகோபர் தீவுகளின் நடனம், தேசிய ஒற்றுமை நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டனர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், தலைமைச் செயலர் சரத் சவுகான் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமீப தினங்களாக நடந்த ஒரு சில அரசு விழாக்களில் கவர்னர் பங்கேற்ற நிலையில் முதல்வர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் போக்கு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த விழாவில் இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கவர்னர் மாளிகையில் நடந்த விடுதலை நாள் தேனீர் விருந்து நிகழ்ச்சியில், பிரதான கட்சியான காங்., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி