உயிரை பாதுகாக்க ெஹல்மெட் அவசியம்; அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
புதுச்சேரி; புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில் 36வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பேசியாதாவது:மக்கள் தொகை உயர்ந்துள்ளது போல், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கிறது. விபத்து உயிரிழப்புகளை தடுத்து, மாநிலத்தை பாதுகாக்க வேண்டிய கடமை, ஒவ்வொருவருக்கும் உள்ளது. மக்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும். கட்டாயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. எந்த ஒரு திட்டத்தையும் அரசு திணிக்க விரும்பவில்லை.நகரப் பகுதியில் ஹெல்மெட் போட கட்டாயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது. உயிரை பாதுகாத்து கொள்ள ஹெல்மெட் போட வேண்டும்.சாலைகள் போடப்பட்டு, போக்குவரத்து சிக்னல்கள் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. குற்றங்களை தடுக்க நகரத்தை கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.சில முடிவுகளை கட்டாயத்தின் பேரில் எடுக்க வேண்டிய சூழல் அரசுக்கு இருக்கும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு முதலில் அபராதம் விதிக்க வேண்டாம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அரசு ஊழியர்கள், பள்ளி கல்லுாரி மாணவர்களை ஹெல்மெட் அணிய சொல்லுங்கள்.அதன் பிறகு படிப்படியாக மக்களே போட ஆரம்பித்து விடுவர். நிர்பந்தம், கட்டாயத்தின் காரணமாகத்தான் ஹெல்மெட் அணிவது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.