போதை பொருள் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப்பொருள் வழக்கு ஒன்றில், கைதுக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்காதது மற்றும் சான்று பொருட்களின் எடையில் முரண்பாடுகள் இருப்பது குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலை பொதுப்பணித் துறை நீர்தேக்க தொட்டி அருகே கடந்த பிப்ரவரி மாதம் 6 ம்தேதி ஒதியஞ்சாலை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த வைத்திக்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை மடக்கி சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா, எல்.எஸ்.டி., போதை ஸ்டாம்ப் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொருவரையும் கைது செய்ய ஒதியஞ்சாலை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். ஆனால், அவர்களுக்குக் கைதுக்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படவில்லை. இக்காரணத்தினால், குற்றவியல் நடுவர் காவல் கோரிக்கையை நிராகரித்து இருவரையும் விடுதலை செய்தார். அதேநேரத்தில் அவ்வழக்கில் எல்.எஸ்.டி., போதை பொருட்களை விற்பனை செய்ததாக மூன்றாவது நபர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீனில் விடுதலை செய்யகோரி, ைஹகோர்ட்டில் மனு தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் பல்வேறு தரப்பினருக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், அறிக்கைகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கைதான நபர்களுக்குப் புரிந்த மொழியில், உரிய முறையில் எழுத்துப்பூர்வமாகக் கைதுக்கான காரணங்களை வழங்குவது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கட்டாயமாகும். இதுதொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களை அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்குமாறு டி.ஜி.பி., க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கடந்த 2025 நவம்பர் 6- தேதி க்குப் பிறகு போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எடை அளவீட்டு முரண்பாடு: பறிமுதல் செய்யப்பட்ட எல்.எஸ்.டி. ஸ்டாம்புகளின் எடை தொடர்பாகக் காவல்துறை தாக்கல் செய்த எதிர் மனுவிற்கும், தடய அறிவியல் துறை அறிக்கைகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக முதல் மற்றும் கூடுதல் தடயவியல் சோதனைக் கூட அறிக்கைகளில் எல்.எஸ்.டி ஸ்டாம்புகளின் எடையில் முரண்பாடுகள் 0.1 கிராம் மற்றும் 0.1582 கிராம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கிருமாம்பாக்கம் தடய அறிவியல் துறை இயக்குநருக்கும், கிழக்கு எஸ்.பிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவியல் நடைமுறைகளின்படி, கைது செய்யப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வமான காரணங்கள் வழங்கப்படாத பட்சத்தில், அவர்களை வெறும் விடுதலையாக அனுப்புவதா அல்லது திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிப்பதா என்பது போன்ற சட்டப்பூர்வமான சந்தேகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் மன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு அடுத்தமாதம் 5ம் தேதியில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.