வேடந்தாங்கலாக மாறும் புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் ஜாலி
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்களுக்கு இணையாக சைபர் கிரைம் குற்றங்கள் தினசரி அதிகரித்து வருகிறது. அதுபோல், டிராபிக் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இவற்றை சரிசெய்ய போதிய காவலர்கள் இன்றி போலீஸ் துறை திணறி வருகிறது. போலீஸ்காரர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.புதுச்சேரி போலீசில் கடந்த 15 ஆண்டிற்கு முன்பு வரை ஐ.ஜி., டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி., (புதுச்சேரி மற்றும் காரைக்கால்), ஐ.ஆர்.பி.என்., கமாண்டன்ட் ஆகிய 5 ஐ.பி.எஸ்., பதவிகள் மட்டுமே இருந்தது.டில்லியில் டி.ஜி.பி., ரேங்கில் பணியாற்றிய அதிகாரி புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், இங்கும் டி.ஜி.பி., மற்றும் ஏ.டி.ஜி.பி., பதவியும் உருவானது. 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியாற்றிய இடத்தில் தற்போது, டி.ஜி.பி., ஐ.ஜி., 2 டி.ஐ.ஜி.க்கள், சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் நுண்ணறிவு, போக்குவரத்து, காரைக்கால் என, 4 சீனியர் எஸ்.பி.க்கள், ஒரு கமாண்டன்ட், கிழக்கு எஸ்.பி., என 10 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.ஒரு சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரி புதுச்சேரிக்கு வந்தால், அவருக்கு தனி அலுவலகம், அலுவலக பணிக்கு எஸ்.ஐ., மற்றும் 5 முதல் 8 காவலர்கள், அரசு குடியிருப்பு அங்கு பணியாற்ற ஆட்கள், 2 முதல் 3 கார்கள் அளிக்க வேண்டும்.ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவரது பணிக்காக நியமிக்கப்படும் காவலர்களுக்கு மாத சம்பளம் என கணக்கிட்டால் குறைந்தது ரூ. 7 முதல் 10 லட்சம் வரை சம்பளம் செலவாகிறது. புதுச்சேரியில் ஏற்கனவே பணியில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சரியான அலுவலகம் இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களில் அலுவலகம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரி வந்த ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு அலுவலகம் எங்கு அமைப்பது என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.சின்னஞ்சிறிய புதுச்சேரியில் இவ்வளவு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தேவையா என சமூக அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாவட்டத்திற்கு ஒரு ஐ.பி.எஸ்.,
நமக்கு அருகில் உள்ள கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் புதுச்சேரி நிலப்பரப்பை விட பெரியது. மக்கள் தொகையும் அதிகம். ஆனால், அங்கு ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி மட்டுமே ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு பணியை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.