ஊர்காவல் படை வீரர் பைக் விபத்தில் பலி
புதுச்சேரி; ஊர்காவல் படை வீரராக பயிற்சி பெற்ற பட்டதாரி, பைக் விபத்தில் இறந்தார்.புதுச்சேரி, கோரிமேடு, இந்திரா நகரை சேர்ந்தவர் பகவன்தாஸ்; ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை உதவி ஆய்வாளர். இவரது மகன் பிரசாந்த், 31; எம்.பி.ஏ., பட்டதாரி. இவர், புதுச்சேரி காவல்துறையில் கடந்த 2024ம் ஆண்டு ஊர்காவல் படை வீரராக தேர்வு செய்யப்பட்டு, கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சியில் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் காவலர் பயிற்சி பள்ளியில் இருந்து அனுமதியின்றி தனது பி.ஓய் 01 சி.எப் 9844 பதிவெண் கொண்ட பைக்கில் வெளியே சென்ற பிரசாந்த், தனது நண்பர்களை சந்தித்து விட்டு, அதிகாலை 3:30 மணி அளவில், மீண்டும் பைக்கில் பயிற்சி பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.பூமியான்பேட்டை, குண்டுசாலை வழியாக பிரசாந்த் வந்தபோது, அங்கு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லியில் எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானர். தலையில் படுகாயமடைந்த பிரசாந்தை அவ்வழியாக சென்றவர்கள், ரோந்து போலீசார் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்து, பிரசாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தார்.பகவன்தாஸ் அளித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஊர்காவல் படை வீரராக பயிற்சியில் ஈடுபட்டு வந்தவர், பைக் விபத்தில் இறந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் அணியாததால் மரணம்
புதுச்சேரியில் கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக போலீசார் மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பைக்கில் ஓட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊர் காவல் படை வீரராக பயிற்சி பெற்று வந்த நபர், அதிகாரிகளின் அனுமதி பெறாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக்கில் வெளியே சென்றதால், விபத்தில் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.