உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி

ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி

புதுச்சேரி: வாகனங்களை நிறுத்த தேவாலயம் இடத்தை வாடகைக்கு வாங்கி தருவதாக கூறி, ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 9 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடம் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன், 68. இவர், கடற்கரை சாலையில் லா கோரமண்டல் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது ஓட்டல் அலங்கார கண்ணாடி வேலைக்கு ஆட்கள் தேடியபோது, புதுச்சேரி, செயின்ட் கில்ஸ் வீதியை சேர்ந்த பசில் ராக் என்பவர் அறிமுகமாகி பணியினை செய்துள்ளார். அப்பணியின் போது, சாமிநாதன் ஓட்டலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடம் இல்லாமல், இடம் தேடி அலைந்து வருவதாக பசில் ராக்கிடம் தெரிவித்தார்.பசில் ராக் துாமா வீதியில் உள்ள தேவாலயத்தின் நிர்வாக குழுவில் தான் ஒரு உறுப்பினராக இருப்பதாகவும், அங்கு வாகன நிறுத்த 4000 சதுரடி இடத்தை மாத வாடகை 5 ஆயிரம் ரூபாய்க்கு, ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்து, அதற்காக 9 லட்சம் ரூபாய் செலவாகும் என, தெரிவித்தார்.இதைநம்பி, சாமிநாதன் பல்வேறு தவணைகளாக பசில் ராக்கிற்கு 9 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பசில் ராக் வாகன நிறுத்தத்திற்கு முறையான அனுமதியை பெற்று தராமல் காலம் கடத்தி வந்தார். சந்தேகமடைந்த சாமிநாதன் நேரடியாக தேவாலய பங்கு தந்தையிடம் சென்று விசாரித்தபோது, இதுதொடர்பாக பசில் ராக் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை எனவும், அந்த இடத்தை வாடகைக்கு விடுவது இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.இதுகுறித்து சாமிநாதன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், பசில் ராக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !