ஜிப்மருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த நிலையில் நேற்று மீண்டும் மனித வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நாட்டின் தலைச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று. இங்கு, புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு சமீப காலமாக வெடிகுண்டு வைத்திருப்பதாக அடிக்கடி இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணி அளவில் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், ஜிப்மரில் இன்று மதியம் 2:30 மணிக்கு ஆர்.டி.எக்ஸ் மனித வெடிகுண்டு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், எஸ்.பி.,க்கள் ரகுநாயகம், வம்சித ரெட்டி, கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட மருத்துவமனையை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தீயணைப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.பின்னர், ஜிப்மர் வளாகத்தில் இயங்கி வரும் மருத்துவ கல்லுாரி, செவிலியர் கல்லுாரி, கேந்திர வித்யாலயாவில் உள்ள மாணவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராவ் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள், சப் இன்ஸ்பெக்டர் பழனிராஜா தலைமையில் மோப்ப நாய்கள் பைரவ், ராம் மற்றும் டோனி ஆகியவற்றின் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு, நிர்வாக அலுவலகம், கேன்டீன், மருத்துவக்கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, கேந்திர வித்யாலயா என ஜிப்மர் வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். பகல் 12:15 மணி முதல் 2:30 மணிவரை நடந்த இச்சோதனயில், இ-மெயில் தகவல் புரளி என்பதை உறுதி செய்த பின்னரே போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.பின்னர், மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்திற்கு உரிய பொருட்கள் ஏதேனும் கண்டால் உடன் தகவல் தெரிவிக்குமாறு ஊழியர்களுக்கு போலீசார் அறிவுருத்தினர். மனித வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் முழு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தொடரும் மிரட்டல்
புதுச்சேரியில், கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கவர்னர் மாளிகை, முதல்வர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கவர்னர் மற்றும் முதல்வர் வீட்டிற்கான மிரட்டல் இ-மெயில் டி.ஜி.பி., அலுவலகத்திற்கே வந்தது. ஒவ்வொரு மிரட்டலின் போதும், போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினருடன் சென்று சோதனை நடத்தி, புரளி என்பதை உறுதி செய்வது வாடிக்கையாகி உள்ளது.
மக்கள் அச்சம்
ஜிப்மர் மருத்துவமனைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 22ம் தேதி காஷ்மீரில், பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.