டிராக்டர் மீது லாரி மோதி கணவன், மனைவி பலி
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 45; இவரது மனைவி சுகுணா, 38; இருவரும், விழுப்புரத்தில் கொத்தனார் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக திருவெண்ணெய்நல்லுார் அடுத்துள்ள பேரங்கியூர் ( பைத்தாம்பாடி கூட்ரோடு) பகுதியில் நேற்று இரவு 7:00 மணிக்கு பஸ்சுக்காக காத்திருந்தனர்.அப்போது, கரடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி லதா, மகன் ராஜ்குமார் மூவருடன் சென்னை - திருச்சி பைபாஸ் சாலையில் டிராக்டரில் வந்துள்ளார். அப்போது ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சுகுணா இருவரும் டிராக்டரை நிறுத்தி லிப்ட் கேட்டு ஏறினர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது, திருச்சி நோக்கி சென்ற லோடு லாரி, டிராக்டர் டிப்பர் மீது வேகமாக மோதியது. இதில் டிராக்டர் டிப்பர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.டிப்பரில் அமர்ந்திருந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுகுணா, லதா மற்றும் ராஜ்குமார் ஆகிய மூன்று பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சுகுணா, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் கரடிப்பாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகாரின்பேரில் திருவெண்ணைநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.