மாநில அளவிலான ஹாக்கி போட்டி வருமான வரித்துறை அணி முதலிடம்
பாகூர் : குருவிநத்தம் கிராமத்தில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், சென்னை வருமான வரித்துறை அணி முதலிடம் பிடித்தது.பாகூர் அடுத்த குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு மேல்நிலை பள்ளி விளையாட்டு திடலில், மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது.இப்போட்டியில், புதுச்சேரி, சென்னை, கடலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 அணிகள் பங்கேற்றன. சென்னை வருமான வரித்துறை துறை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், நெய்வெலி ஹாக்கி அகடமி, கூடபாக்கம் ஹாக்கி கிளப் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.இதில், சென்னை வருமான வரித்துறை மற்றும் கூடபாக்கம் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் 3 கோல் அடித்து சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. கூடப்பாக்கம் அணி இரண்டாவது இடமும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி மூன்றாம் இடமும், நெய்வெலி ஹாக்கி அணி நான்காம் இடமும் பிடித்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள், சிறந்த வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.விழாவில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணை சேர்மன் தவமுருகன், மதியழகன், காங்கேயன் ஆகியோரும் பரிசுகள் வழங்கினர். முன்னதாக, விழாவிற்கு, காவல் துறை அதிகாரி கார்த்திகேயன், உடற் பயிற்சி ஆசிரியர் ராஜா ஆகியோர் வரவேற்றனர். ஏற்பாடுகளை, பாபு, அருண்குமார், ரஞ்சித் , யுவராஜ் செய்திருந்தனர்.