சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு; இ.கம்யூ., குற்றச்சாட்டு
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழங்கு பாதுகாக்க காவல் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும் என இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் மது மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பால், இளைஞர் சமுதாயம் சீரழிவது மட்டுமின்றி வழிப்பறி, செயின் பறிப்பு, மாமூல் வசூல், மிரட்டி பணம் பறித்தல், கட்ட பஞ்சாய்த்து போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டிய காவல்துறை மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதால் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு மற்றும் பகல் நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் இல்லாததால், சமூகவிரோதிகள் பயமின்றி வெளியில் உள்ளனர். ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டிய குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பது இல்லை.இதனால் சமீப காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதோடு, 3 ரவுடிகளை மற்றொரு ரவுடி கும்பல் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. காவல் துறை இனி முனைப்புடன் செயல்பட்டு, ரோந்து சென்று, குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.