சிறு வயதில் புத்தக ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்: முதல்வர்
புதுச்சேரி: சிறு வயதிலேயே புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.கருவடிக்குப்பம், இ.சி.ஆரில் குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: நம் பிள்ளைகளுக்கு கலைகளின் மீது ஆர்வம் இருக்க வேண்டும் என்பதற்காக கலை, பண்பாட்டுத்துறை மூலம் பாரதியார் பல்கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அந்த பல்கலைக்கூடத்தில் பயின்றவர்கள் வெளிநாடுகளில் கூட வேலைக்கு சென்றுள்ளனர். நல்ல புத்தகங்களை படித்து அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறு வயதிலேயே புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை நாம் உருவாக்க வேண்டும். புதுச்சேரி, 100 சதவீதம் பள்ளி கல்விக்கல்வியை வழங்கும் மாநிலமாக உள்ளது. பள்ளிப்படிப்பு மட்டுமில்லாமல், அனைத்து கல்லுாரிகளிலும் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பள்ளி மாணவர்கள் நன்றாக படித்தால் மருத்துவம், பொறியியல் படிக்க முடியும். பெரிய நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசுப்பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு மூலமாக, மருத்துவ படிப்பை செலவின்றி படிக்கும் வாய்ப்பை, அரசு உருவாக்கி தந்துள்ளது.ஆதிதிராவிட மாணவர்கள் எந்த தனியார் கல்லுாரிகளிலும் கட்டணம் இன்றி படிக்க முடியும். பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வி படிக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.