புதுச்சேரி: போலி மருந்து வழக்கை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, காங்., வலியுறுத்தி உள்ளது. காங்., தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது: போலி மருந்து வழக்கை சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு கவர்னர் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. காலதாமதமின்றி விசாரணை மிக விரைவாக நடத்த வேண்டும். சி.பி.சி.ஐ.டி., போலீசார் கொண்டு வந்த உண்மைகள் அழியாமால் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் முழு விசாரணை நடத்த வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கிய பின், பல குடோன்களில் இருந்த மருந்துகள் மாற்றப்பட்டுள்ளது. மருந்துகளை மாற்றியவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள், அரசில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு மற்றும் உத்தரவின்றி செயல்பட முடியாது. எனவே, தான் இவ்வழக்கை முழுமையாக நடத்த வேண்டும். இவ்வழக்கை 2017ல் இருந்தே விசாரிக்க வேண்டும். காலாவதி மருந்து குறித்தும் விசாரிக்க வேண்டும். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தொடர்பு உள்ளது குறித்து கண்டறிய வேண்டும். போலி மருந்து விவகாரத்தில், நாங்கள் சபாநாயகர் மீது குற்றம் சாட்டி வருகிறோம். இவ்வழக்கை சி.பி.ஐ., சுதந்திரமாக விசாரிக்க வசதியாக, சபாநாயகரை பதவியில் இருந்து அரசு நீக்கி, அவர், மீது வழக்கு பதிந்து முழுமையாக விசாரிக்க வேண்டும். ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளை நடுநிலையாரை கொண்டு ஆய்வு செய்து, அதன் உண்மை நிலையை மக்களுக்கு அரசு விளக்க வேண்டும். புத்தாண்டிற்கு முன்பாக போலி மருந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் காங்., மற்றும் இண்டி கூட்டணி சார்பில், போராட்டம் நடத்தப்படும்' என்றார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'போலி மருந்து விவகாரத்தில் ஆளும் கட்சி பிரமுகரான அரியாங்குப்பம் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான ராஜாவை, சபாநாயகர் செல்வம் அழைத்து சென்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன், சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவ்வழக்கில் முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பதவி நீக்க வேண்டும்' என்றார்.