அரசு சேவைகளுக்கு ஒருங்கிணைந்த செயலி அறிமுகமாகிறது: அனைத்து வரிகளையும் சுலபமாக செலுத்தலாம்
புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கான அரசின் அனைத்து ஒருங்கிணைந்த சேவைகள் அடங்கிய சிட்டிசன் செயலியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பொதுமக்களுக்கும் சேவை உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 'குடிமக்கள் சாசனம்' கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட காலக்கெடுக்குள் மக்கள் சேவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இது சம்பந்தமான தகவல் பலகை அரசு துறைகளில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும். இப்பலகையில் மக்கள் எந்தெந்த குறைகளுக்கு யாரை அணுக வேண்டும்.யாரிடம் மனு கொடுக்க வேண்டும். இந்த மனுவுக்கு எவ்வளவு நாளுக்குள் பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இந்த தகவல் பலகையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது தவிர ஆன்லைன் சேவைகளையும் பொதுமக்களுக்கு விரைவாக வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆன் லைன் சேவையில் அரசு துறைகள் இன்னும் பின்தங்கி உள்ளன. தனித்தனியே அரசு துறைகள் ஆன்லைன் சேவைகள் வழங்கினாலும், எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. மீண்டும் கரண்ட் பில், குடிநீர் வரி, சொத்து வரி கட்ட அரசு அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர்.எனவே, மக்களுக்கான அனைத்து ஒருங்கிணைந்த சேவைகள் அடங்கிய ஒரு சிட்டிசன் செயலியை அறிமுகப்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.புதுச்சேரி அரசின் இந்த செயலியை மொபைலில் டவுண்லோடு வழியாக செய்து கொண்டு, கரண்ட் பில், குடிநீர், சொத்து வரி என அரசின் அனைத்து வரிகளையும் இருந்த இடத்தில் இருந்தே செலுத்திவிட முடியும்.இ.சி.ஆரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த கட்டுபாட்டு கட்டளை மையம் வாயிலாக இந்த செயலி ரெடி வருகின்றது.இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசின் சேவைகளை எளிமைப்படுத்த பல்வேறு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த வகையில் புதுச்சேரி அரசின் ஒருங்கிணைந்த சேவைகளை தர இந்த செயலி உருவாக்கப்பட்டு வருகின்றது. புதுச்சேரி அரசில் தற்போது 54 அரசு துறைகள் உள்ளன. இந்த துறைகளின் அனைத்து சேவைகளும் இனி இந்த செயலி வழியாக ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ஒவ்வொரு புதுச்சேரி குடிமகனும் இதனை கட்டாயம் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.இந்த செயலியை பிளே ஸ்டோரில் இருந்து கணினி அல்லது மொபைல்போன் வழியாக இதனை டவுண்லோடு செய்து கொண்டு பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் ஒவ்வொரு துறைகளாக சேவைகளை தேடி பொதுமக்கள் அலைந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்த செயலிக்கான தொழில்நுட்ப வடிமைப்பு முடிந்ததும், இதற்கான பெயரை அரசு முறைப்படி அறிவிக்கும் என்றார்.