உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம விலோம பயிற்சி குறித்த முன்னுரை

உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம விலோம பயிற்சி குறித்த முன்னுரை

இப்பகுதியில் கடந்த 8 வாரங்களாக சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகளை பார்த்தோம். இனி, உடலில் சக்தியை பெருக்கி, சமநிலை அடையும் 'லோம விலோம'பயிற்சி குறித்த முன்னுரையை இந்த வாரம் பார்ப்போம்... உலகில் உள்ள மொழிகளிலேயே நம் உடலின் மொழியே உண்மையான, நாணயமான மொழி. அனைவரும் புரிந்து கொள்ளக்கூடியது ஒரு புன் சிரிப்பு, புருவச்சுழிப்பும் அவ்வாறானதே. தொங்கிய முகம் தோல்வியையும், விரக்தியையும், விரிந்த தோளும், நிமர்ந்த முகமும் தன்னம்பிக்கை மற்றும் நேர்மின் ஆற்றலைக் குறிக்கும். இந்தியாவில், இந்து கலாசாரத்தில் இந்த உடல் மொழி, உருமாறி பரதக் கலையாக தோன்றியது. இதன் மூலம் கை, கால், முகம், கண் மற்றும் உடலின் அசைவிற்கு ஏற்ப ஒரு பொருள் அல்லது சில கருத்துக்கள் விளக்கப்பட்டன. இந்து சமுதாயத்தினரின் உயர்ந்த குறிக்கோளாக ஆன்மாவின் விடுதலையை கருதினர். அதை அடைய உடலின் அசைவுகளை பதப்படுத்தி, 'மேன்மையான சக்தியை ' பெற இயலும் என அறிந்தனர். பண்டைக்கால யோகிகள், தங்கள் ஆன்மாவை கடவுளின் ஆன்மாவுடன் இணைப்பதையே விரும்பினர். அதற்காக தங்களை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக ஆராய்ந்து, தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளவும், அதிலிருந்து முடிந்தளவு நன்மையடைய விரும்பினர். ஒரு குறிப்பிட்ட வடிவம் அல்லது உருவத்திலும் அதற்கேற்றவாறு சக்திகள் உண்டு என்பதை யோகிகள் கண்டறிந்தனர். இந்த சக்தியின் சுழற்சி நம் மனித உடலில் பத்து உருவ மையங்களில் செல்வதையும், இந்த சக்திகள் கைகள், கால்கள் வழியே வெளியேறுவதை உணர்ந்தனர். இதை கட்டுப்படுத்தவே நாம் உள்ளங்கால்கள் மற்றும் உள்ளங்கைகளை சேர்க்கிறோம். கை கட்டுவது. கால்களை மடித்து சம்மணமிட்டு அமர்வது, தலையை கால் அருகிலும், காலை தலைக்கு அருகேயும் கொண்டு சென்றனர். இவற்றால் ஒரு மேன்மையான சக்தியையும், வலிமையான எண்ணங்களையும், தெளிந்த சுத்தமான உணர்வுகளை பெற முடிந்தது. அதனால் தான், மனிதன் இந்த உடற்கூட்டிற்கு அப்பாற்பட்டவன் என்பதை யோகிகள், தங்கள் சீடர்களுக்கு கற்பித்தனர். அதாவது, கண்ணிற்கு தெரியும் இந்த பூத உடலைத் தவிர, கண்ணிற்கு புலப்படாத மேலும் நான்கு உடலை உடையவன். இதையே, 'பஞ்ச கோஷம்' அல்லது 'ஐந்து உறைகள்' என அழைத்தனர். ஒவ்வொரு உடலும் தனித்தனி சுழற்சி உடையது. அவற்றில் நமது பூத உடலின் உறையே மிக அடர்த்தியானது மற்றும் மெதுவானது. இதன் பெயர் உணவின் உடல். அடுத்தது பிராண உடல், இது உயிரினங்களை இயங்க வைக்கும் சக்தி. மூன்றாவது மனதின் உறை, நான்காவது உயரிய பகுத்தறிவின் உறை. ஐந்தாவது உறையின் பெயர் 'பேரானந்தத்தின் உறை', இதை உணர்வது மிக கடினம். இந்த ஐந்து உறைகளையும் சீர்படுத்த அபரிமிதமான சக்தி தேவை. இந்த சக்தியை அதிகரிப்பதையே யோகிகள் தங்கள் வாழ்வின் தேடலாக கொண்டிருந்தனர். இந்த இயல் உலகின் பிராண சக்தியை கட்டுப்படுத்தி, அதனை ஐந்து உறைகளினுாடே ஊடுறுவச் செய்து ஆரோக்கியம், சந்தோஷம், பலம், பெருமை, மனவளர்ச்சி, உணர்வுகளின் கட்டுப்பாடு, சாந்தி, உடலின் யெளவனம், சக்தி மற்றும் பேரானந்தம் பெற்று வாழ்வின் லட்சியத்தை அடையலாம். காற்றே உயிர் என்பதை யோகிகள் உயர்ந்தனர். நுாற்றுக் கணக்கான வழிகளில் சுவாசிக்கும் முறைகளை ஆராய்ந்து நோக்கினர். பின்னரே, பிராணாயாமத்தின் விஞ்ஞானத்தை வளர்த்தனர். அதன் வாயிலாக சுவாசத்தை அடைக்கும் முறைகளையும், பிராண சக்தியின் சுழற்சியை அடக்கும் முறையை கண்டறிந்தனர். மனிதன் உடல் இயக்கத்தால் களைப்பு அடைகிறான். உடலியக்கத்தினால், தன் சக்தியை இழக்கிறனாம். அதையே அவன் செயலற்று ஓய்வாக இருக்கும்பொழுது மீண்டும் அந்த சக்தியை பெற்றுவிடுகிறான். உடல் அசைவுகளிலும், சில நிலைகளிலும் சக்தியை உற்பத்தி செய்வது சாத்தியம். அதேபோல், உடலின் சில அசைவுகளாலும், நிலைகளாலும் சக்தியை விரயம் செய்வதும் சாத்தியமே. இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு, அந்த செயல் அல்லது அசைவின் இசைவே ஆகும். சில சப்தங்கள், சில வார்த்தைகள் மூலம் எவ்வாறு ஒரு இலக்கணச் சுத்தமான வாக்கியம் அமைகிறதோ, அதேபோல, தத்துவ அடிப்படையில் உணர்ந்து சமநிலை தரும் செயல்கள் செய்வதால் அந்த இசைவை நாம் பெறலாம். இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்.....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ