உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொகுதி மாறுகிறாரா முதல்வர் ரங்கசாமி?

தொகுதி மாறுகிறாரா முதல்வர் ரங்கசாமி?

சட்டசபை தொகுதி வரையறைக்கு பின்பு பிரிக்கப்பட்ட தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் மூன்றும் முதல்வர் ரங்கசாமியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்த மூன்று தொகுதிகளிலும், ரங்கசாமி கை காட்டும் நபரே தேர்தலில் வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். இதில் ஏனாமில் தோல்வியை தழுவினாலும், தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.கடந்த லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நமச்சிவாயத்திற்கு, இந்திரா நகர் தொகுதியில் மட்டுமே அதிக ஓட்டு கிடைத்தது. ரங்கசாமியின் கோட்டை என வர்ணிக்கப்படும் தட்டாஞ்சாவடி, கதிர்காமம் தொகுதிகளில் என்.ஆர்.காங்.,க்கு குறைவான ஓட்டுகளே கிடைத்தது. முதல்வரின் தொகுதியிலே ஆளும் கட்சிக்கு ஓட்டுகள் கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி எந்த புதிய திட்டம் துவங்கினாலும் தனது தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் துவக்கி வைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கும் திட்ட பணியை, இந்திரா நகர் தொகுதி மேட்டுப்பாளையத்தில் தடபுடலாக நடத்தி துவக்கி வைத்தார்.இந்திரா நகர் தொகுதி பயனாளிகளுக்கு, தொகுதி எம்.எல்.ஏ., ஆறுமுகத்திற்கு தெரியாமலே, முதல்வர் அலுவலகத்தில் இருந்து முதல்வரின் நிவாரண நிதிகள் வழங்கப்பட்டதால் ஆறுமுகம் எம்.எல்.ஏ., அலுவலக அதிகாரியிடம் தகராறில் ஈடுப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வுகள் அனைத்தும், முதல்வர் ரங்கசாமி, வரும் சட்டசபை தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் களம் இறங்க தற்போதே காய் நகர்த்தி வருவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை