பாரதி வாழ்ந்த மண்ணில் கவர்னராக இருப்பது பெருமை
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பாரதியாரின் தமிழ் இலக்கிய துறை மற்றும் வானவில் பன்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின் 144வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசியதாவது: பாரதியைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள், அதிகம் படித்தவர்கள் இருக்கிறீர்கள். உங்கள் முன், பாரதியைப் பற்றி பேசும் அளவுக்கு நான் பாரதியை படித்தது இல்லை. அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்தார். அவரை வரவேற்று, அவருக்கு தங்க இடம் தேடிக் கொடுத்து, உணவு சமைத்து கொடுத்து பாதுகாத்தவர்களில் பாரதி முக்கியமானவர். பாரதி வாழ்ந்த மண்ணின் கவர்னராக இருக்கிறேன் என்பதை பெருமையோடு சொல்லுவேன். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே அகண்ட பாரதத்தை கனவு கண்டவர் பாரதியார். அகண்ட பாரதத்தில் வாழ்கின்ற மக்கள் மொழியால், இனத்தால், மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் எல்லோரும் பாரதம் என்ற ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள், இந்த நாட்டின் மன்னர்கள் என்ற கருத்தை உலகத்திற்கு ஆணித்தரமாக சொன்னவர். 30 கோடி முகங்கள் இருந்தாலும், மொழிகள் 18 இருந்தாலும் அவர்களுடைய சிந்தனை ஒன்று தான் என்று வீர முழக்கம் இட்டவர். நம்மை பிரித்து ஆள வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயரின் சூழ்ச்சியை வந்தே மாதரம் பாடல் பாடி கலங்க அடித்தவர். தொலை நோக்குப் பார்வையை தன்னுடைய பாட்டுகளில் வெளிப்படுத்தியவர். வயிற்றுக்கு சோறிட வேண்டும்; இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்… பயிற்று பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும். உணவு, கல்வி, சமத்துவம், சமுதாய மேம்பாடு இதை எல்லாம் வலிமையோடு சொல்லும் பாரதியின் வரிகள். பெண் விடுதலைக்கும் பாரதி ஒரு முன்னோடி. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று அறைகூவல் செய்தவர். பாரதிக்கு சமஸ்கிருதம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் உட்பட 16 மொழிகள் தெரியும். அதில் எட்டு மொழிகளில் புலமை உள்ளவர் என்று சொல்லுவார்கள். எத்தனை மொழிகளை தெரிந்து கொண்டாலும் 'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றார்' நண்பர்களே தேசப்பற்று என்பது அதுதான். நம்முடைய மண்ணையும் மக்களையும் நேசிப்பது. அதைதான் பாரதியார் வாழ்ந்து காட்டினார். 'நமக்கு தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்' என்று துணிவு காட்டினார். பாரதியார் என்பவர் ஒரு கவிஞர் மட்டும் அல்ல. அவர் ஒரு தலைவருக்கான மாடல். இளைஞர்களின் உந்து சக்தி. ஒரு தீர்க்க தரிசி. இவ்வாறு கவர்னர் பேசினார்.