| ADDED : நவ 18, 2025 05:50 AM
புதுச்சேரி: சென்டாக் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதிக்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். மருத்துவம், செவிலியர் மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகிறது. இந்த கல்வி உதவித்தொகை கடந்த 2021-22ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த 4 ஆண்டிற்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22ம் ஆண்டிற்கு மருத்துவம், செவிலியர், பொறியியல் மாணவர்களுக்கான ரூ.3.14 கோடி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.2.25 லட்சம், செவிலியர் படிப்பிற்கு ரூ.20 ஆயிரம், பொறியியல் படிப்பிற்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மூன்றாண்டுகளுக்கான நிதி விரைவில் வழங்கப்படும். அதேபோன்று, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் நிதியுதவி வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக 15,700 பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்றார். அப்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.