தனித்து போட்டியிடுவோம்; தன்மானம் காப்போம் தி.மு.க., விமர்சனத்திற்கு காங்., நிர்வாகிகள் பதிலடி
புதுச்சேரி: ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய முடியாது என தி.மு.க., விமர்சித்த சூழ்நிலையில் தனித்தே 30 தொகுதியில் போட்டியிடுவோம்; தன்மானம் காப்போம் என, காங்., நிர்வாகிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.புதுச்சேரி காங்., கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. 1964, 1985, 1991, 2001, 2006, 2016 என, 6 முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்த காங்., கடந்த 2021ம் ஆண்டு நடந்த 15-வது சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தது.காங்., 2 தொகுதியில் மட்டுமே வெற்றிப்பெற்றது. அதே நேரத்தில் கூட்டணியில் இருந்த தி.மு.க., 6 சீட்டுகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால் கூட்டணிக்கு தலைமை தாங்குவதில் இரு கட்சிகள் இடையில் ஒருங்கிணைப்பு இல்லை. தனித்தனியே கட்சியை வளர்க்க களம் இறங்கியுள்ளனர்.சமீபத்தில் முதல்வர் நாராயணசாமி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது கட்சி பெயரை குறிப்பிடாமல், கூட்டணியில் உள்ளவர்கள் தைரியம் இருந்தால் தனியாக போட்டியிடலாம் என, தி.மு.க.,வை விமர்சித்து இருந்தார்.இதற்கு எதிர்கட்சி தலைவர் சிவா, ஓடாத வண்டியில் பயணம் செய்ய தி.மு.க., தயாராக இல்லை. கூட்டணியில் இருந்தால் 20 தொகுதிகளில் போட்டியிடுவோம். இல்லையெனில் தனித்தே 30 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவோம் என, பதிலடி கொடுத்தார்.இந்த விவகாரம் நேற்றைய காங்.,கட்சி கருத்துகேட்பு கூட்டத்திலும் எதிரொலித்தது. தி.மு.க., வுடன் கூட்டணி தேவையில்லை; தனித்தே போட்டியிடுவோம் தன்மானம் காப்போம் என போர்கொடி உயர்த்தினர்.காங்., கட்சி பொது செயலாளர் சரவணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாநில தலைவர் வைத்திலிங்கத்தை சந்தித்து வலியுறுத்தனர். பொது செயலாளர் சரவணன் கூறுகையில், 'இண்டியா கூட்டணிக்கு தமிழகத்திற்கு தி.மு.க., தலைமை தாங்கினாலும், புதுச்சேரியில்காங்., தான் தலைமை தாங்கி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் காங்., 20 தொகுதிகளில் நிற்க வேண்டும். 10 தொகுதிக்கு தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். இல்லையெனில் தன்மானம் காக்க 30 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுவோம் என வலியுறுத்தியுள்ளோம்' என்றார்.கடந்த லோக்சபா தேர்தலில் 28 இடங்களில் இண்டியா கூட்டணி முதலிடம் பிடித்து இருந்தது. வரும் சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க.,- காங்., தனித்து போட்டியிட தயாராகி வருவதால் இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.