காரைக்கால் கோவில் நிலம் மோசடி வழக்கு சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை
காரைக்கால்: காரைக்காலில் கோவில் நிலமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்.பி., சுபம் சுந்தர் கோஷ் தெரிவித்தார். காரைக்கால் கோவில்பத்து பர்வதீஸ்வரர் கோவில் நிலங்களை போலி ஆவணம் தயார் செய்து, மனைப் பட்டாக்களாக மாற்றி, விற்க முயன்ற முன்னாள் துணை கலெக்டர் ஜான்சன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை ஓராண்டாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதாகவும், இவ்வழக்கை ஆமை வேகத்தில் விசாரிப்பதாக காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராஜ்குமார் புகார் அளித்தார். இதையடுத்து, காரைக்கால் தெற்கு எஸ்.பி., சுபம் சுந்தர் கோஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு; காரைக்கால் பர்வதீஸ்வரர் கோவிலின் நில அபகரிப்பு தொடர்பாக நகர போலீசார் வழக்குப் பதிந்து, 9 குற்றவாளிகள் கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திருப்பி தருவதற்காக, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குற்றவியல் நடவடிக்கை மூலம் பெறப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய, நகர போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த சொத்துக்களில் 7 நிலங்கள், வாகனங்கள், தங்க நகைகள், ரொக்கம் போன்றவை அடங்கும். காரைக்கால் நீதிமன்றம் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்களின் மதிப்பு 3 கோடி ஆகும். இது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த தொகை கிடைப்பதை உறுதி செய்யும்' என்றார்.