குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு ரெடி ரெடி: விரைவில் திறப்பு விழாவிற்கு ஆயத்தம்
ராஜ்பவன் சட்டசபை தொகுதி அண்ணாசாலை மற்றும் வள்ளலார் சாலை சந்திப்பில், குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட ஏழு அடுக்குமாடி குடியிருப்புகளில் 224 வீடுகள் பாழடைந்து அச்சுறுத்தி வந்தன.பாதுகாப்பு கருதி அந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. அந்த இடத்தில் வசித்தவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தரும் வகையில், பொதுப்பணித் துறையின் சிறப்பு கட்டடங்கள் கோட்டம் மூலம் 216 குடியிருப்புகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் 12 அடுக்குமாடி தளம் கொண்ட பிரிகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பத்தில், 45.66 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடியிருப்பு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதையடுத்து, கட்டுமான பணியை, 26.01.2023 அன்று முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 98 சதவீத பணிகள் முடிந்துள்ளது. கட்டடத்தின் தரைதளம் முழுவதும் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 12 தளங்களில் 216 -குடியிருப்புகள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு குடியிருப்பிலும் ஹால், படுக்கை அறை, சமையல்அறை, கழிப்பறை மற்றும் பொது பயன்பாட்டு பகுதி வசதிகள் உள்ளன. ஒரு குடியிருப்பின் பரப்பளவு 372 சதுர அடிகள் மற்றும் பொது உபயோக இடமாக, படிக்கட்டு, காரிடர், ஷாப்ட் பகுதி, லிப்ட் பகுதி, பார்க்கிங் பகுதி என, ஒரு குடியிருப்புக்கு 160 சதுர அடி விடப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி., மூலம் மண் பரிசோதனை செய்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வடிமைப்பிற்கு ஒப்புதல் பெற்று 124 அடி ஆழ அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. 180துாண்கள் 80 சென்டிமீட்டர் கனத்தில் ராப்டு சிலாப் வலுவாக போடப்பட்டுள்ளது.இந்த கட்டடம் புதுச்சேரி அரசு துறை மூலம் கட்டப்படும் முதல் உயரமான 13 -தளங்கள் கொண்ட கட்டடம் என்ற சிறப்பினை பெறுகிறது. மேலும் பொதுப்பணி துறையின் மூலம் முதன் முதலாக பிரிகாஸ்ட் முறையில் கட்டட பணி கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்ட பெருமை பெற்றுள்ளது.கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட 45.66 கோடி ரூபாயில், 216 குடியிருப்புகள் கட்டுவதற்காக மட்டும் ரூபாய் 43.90 கோடி செலவிடப்படுகிறது. இதில் கட்டட பணிகள் லிப்ட், எலக்ட்ரிக்கல், தீயணைப்பு கருவிகள் மற்றும் பார்க்கிங் ஆகிய பணிகள் அடங்கும். மற்றும் மேம்படுத்துதல் பணிக்காக 1.76 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சாலை, கழிவுநீர் வாய்க்கால் மற்றும் வெளிப்புற மின்சார வேலை, கழிவுநீர் வேலைகள் நடந்து வருகின்றன. அனைத்து பணிகளும் முடிந்தவுடன் கட்டடங்கள் ஸ்மார்ட் சிட்டி அலுவலகம் வழியாக புதுச்சேரி குடிசைமாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஏற்கனவே குடியிருந்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 4 லிப்ட் வசதிகள். தீயணைப்பு உபகரணங்கள் இடிதாங்கிகள் தரை தளத்தில் பார்க்கிங் 155 கே.வி.ஏ., திறன் கொண்ட ஜெனரேட்டர் கான்கிரிட் சாலை மற்றும் மதிற்சுவர். தெரு விளக்குகள் தடையின்றி குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை