மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார். மண்ணாடிபட்டு தொகுதி கிரிக்கெட் வீரர்கள் மட்டும் பங்கேற்ற சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி. எல். விதிமுறைகளை பின்பற்றி மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆரோவில் பல்மைரா மைதானம், ஊசுடு ஜெகத் அகாடமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், சங்கராபரணி கொம்பன்ஸ், வெற்றி தளபதிஸ், கெத்து காங்கேயன்ஸ், வெற்றி வீரன்ஸ், மின்னல் வீரர்கள், தமிழ் தீரன்ஸ், ஜல்லிக்கட்டு காளையன்ஸ், வேல்ஸ் வீரர்கள் ஆகிய எட்டு அணிகள், வீரர்களை ஏலம் முறையில் தேர்வு செய்து பங்கேற்றனர்.இந்த தொடரில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு தொகை மற்றும் கோப்பை வழங்கினார். இதில், சங்கராபரணி கொம்பன்ஸ் அணி முதலிடம் பிடித்து 75,000 ரூபாய் பரிசு பெற்றது. வெற்றி தளபதிஸ் அணி 2ம் இடத்தையும், கெத்து காங்கேயன்ஸ் அணி 3ம் இடத்தையும், வெற்றி வீரன்ஸ் அணி 4ம் இடத்தையும் பெற்று, தலா 50 ஆயிரம், 40 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் என பரிசு பெற்றன. போட்டியில், சிறந்த தொடர் வீரருக்கான விருது வெற்றி வீரன்ஸ் அணியின் சுமன்ராஜ்ம், சிறந்த பேட்ஸ் மேன் விருது வெற்றி தளபதிஸ் அணியின் சிவசக்திவேல், சிறந்த பவுலருக்கான விருது முருகன் ஆகியோர் பெற்றனர்.மேலும், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.