ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ
அரியாங்குப்பம்; தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. புதுச்சேரி, தவளக்குப்பம் பத்மம் தனியார் ரசாயன தொழிற்சாலையில், கழிவுநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் அடைப்புகளை நீக்குவதற்கான 'காஸ்டிக்' சோடா மூலப்பொருளாக கொண்ட 'கிரானைக்ஸ்' என்ற ரசாயன பவுடர் தயார் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, மூன்று நாட்கள் விடுமுறையால் தொழிற்சாலை இயங்கவில்லை. நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் திடீரென தொழிற்சாலையின் ஒரு பகுதியில் இருந்து நெடியுடன் புகை வந்தது. சற்று நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தவளக்குப்பம் போலீஸ், புதுச்சேரி மற்றும் டி.நகர், பாகூர், வில்லியனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீயில் காஸ்டிக் சோடா வெடித்து சிதறி, தீயணைப்பு படையினர் உடலில் பட்டதில் அவதிக்குள்ளாகினர். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயன பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.